Marque - Heading

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) "கற்பவராக இரு அல்லது கற்பிப்பவராக இரு அல்லது கற்பவருக்கும் , கற்பிப்பவருக்கும் உதவியாளனாக இரு"

வியாழன், 21 ஜனவரி, 2016

தேவை ஜி.டி. நாயுடுகள்!







 
மத்திய அரசு ‘ஸ்டார்ட் அப் மிஷன்’ என்ற இயக்கத்தை ஜனவரி 16 அன்று தொடங்கியுள்ளது. அரைத்த மாவையே அரைக்கும் மனப்பான்மையைக் கைவிட்டுப் புதுமையான தொழில்களை உருவாக்க உதவும் மையங்களை உருவாக்குவதே இந்த இயக்கம். மத்திய அரசின் மனிதவளத் துறையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையும் இணைந்து இத்தகைய 75 மையங்களை உருவாக்க உள்ளன. 

தொழில் முனைப்பே பண்பாடாக
இந்தியாவில் உயர்கல்வியை வழங்கும் நிறுவனங்களான ஐ.ஐ.டி.கள் (IIT), ஐ.ஐ.எம்.கள் (NIT), தேசியத் தொழில்நுட்ப நிலையங்கள் (NIT), இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிலையங்கள் (IIIT), அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் (IISER), பார்மாசூடிகல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான நிலையங்கள் (NIPER) போன்றவற்றின் வழியாகத் தொழில் முனைப்பையே ஒரு பண்பாடாக இளைய தலைமுறையிடம் பரப்புவதே இதன் நோக்கம். இத்தகைய முன்முயற்சி 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்தாலும் தற்போது வேகமடைந்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி-யிலும் ஐ.ஐ.எம்மிலும் படித்து முடித்தவர்கள் பொதுவாக ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்துப் போய்விடுவார்கள். அத்தகையவர்கள் தங்களுக்கான சொந்தத் தொழிலைத் தொடங்கும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இத்தகையோரின் எண்ணிக்கை சில ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டு சதவீதமாக இருந்தது. தற்போது 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. மற்றக் கல்வி நிறுவனங்களிலிருந்தும் இத்தகைய தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற குரல்கள் தற்போது எழுந்துள்ளன.
அத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியாகவே, மத்திய அரசின் மனிதவளத் துறையும் அறிவியல் தொழில்நுட்பத்துறையும் இணைந்து உயர்கல்வி நிறுவனங்களில் ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் முன்முயற்சி மையங்களை ஆரம்பிக்கின்றன. இவற்றை ஆரம்பிக்க ஐயாயிரம் சதுரஅடி உள்ள இடமும் ஒரு வருடத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதியும் தேவை எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் எனும் சிசுக்கள்
அப்போதுதான் பிறந்துள்ள சிசுக்களை இன்குபேட்டர் என்னும் பாதுகாப்புச் சாதனங்களில் வைத்து வளர்ப்பதைப்போலத் தொழில்நுட்ப வணிகம் பற்றிய புதிய கருத்துகளைச் சிதையாமல் வளர்ப்பதற்கான ஆதரவு தேசியத் தொழில்நுட்ப நிலையங்களில் (NIT) அமைக்கப்படுகிற மையங்களில் கிடைக்கும். இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் மொட்டுகளின் பருவத்தில் உள்ள 20 தொழில்நிறுவனங்கள் பாதுகாக்கப்படும். ஒவ்வொரு மையத்தின் செலவு 5 கோடிகளிலிருந்து 10 கோடிகள் வரை இருக்கும். இத்தகைய இன்குபேட்டர்களின் எண்ணிக்கை 2014 ல் 80 ஆக இருந்த 2015-ல் 110 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 50 சதவீதமானவை டெல்லி, மும்பை, பெங்களூர், ஆகிய நகரங்களுக்கு வெளியில் உருவாக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டின் ஐ.ஐ.டியில் உள்ள ஆராய்ச்சிப் பூங்காவைப் போல மேலும் சில கல்விநிறுவனங்களிலும் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ஆராய்ச்சிப் பூங்காவுக்கும் 70 கோடி முதல் 100 கோடி ரூபாய்கள் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது இத்தகைய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. உதாரணமாக, ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற இணையதளங்கள். இவை ஆன்லைன் வணிகத்தில் பெயர் பெற்றுவிட்டன. மேக்-மை-டிரிப் எனும் இணையதளமும் விமான-பேருந்துப் பயணங்களுக்கும் விடுதிகளுக்கும் முன்பதிவு செய்யும் சேவையை அளித்துவருகிறது. 

சின்னதில் உள்ள பெரியது 
 
கிடைக்கிற சின்னச்சின்ன வாய்ப்புகளை வைத்துக்கொண்டு பெரும் பெரும் காரியங்களைச் செய்வது மனிதர்களின் பாரம்பரியப் பழக்கம்தான். அது ஒன்றும் அதிசய மனிதர்களின் அற்புத ஆற்றல் இல்லை. இத்தகைய மனித ஆற்றலை ஒருங்கிணைத்துத்தான் நம்மைவிட வளம் குறைந்த மண்ணைக் கொண்ட சீனா தொழில் உற்பத்தியில் நம்மைவிட முன்னே இருக்கிறது. கிடைப்பதற்கு அரிய தண்ணீரைச் சொட்டு சொட்டாகப் பயன்படுத்தி நாடு தனக்கான விவசாய விளைபொருள் தேவைகளை இஸ்ரேல் உருவாக்கிக்கொள்கிறது. இந்தியாவும் அதே வழியில் பயணம் செய்தால் தனது உடல் ஆற்றலையும் மூளை ஆற்றலையும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்தி நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து மக்களுக்கு நல்வாழ்வைத் தரமுடியும். 

இத்தகைய முன்முயற்சிகள்தான் இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங் களில் வழியாகத் தூண்டப்படுகின்றன. இவை தேவைதான். ஆனால், புதுமை படைக்கும் திறன் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் மட்டும் இல்லை. 

படிக்காத மேதைகள்
கணினி உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய தொழில் அதிபர் பில்கேட்ஸ் பாதியிலேயே படிப்பை விட்டவர். அவர்தான் ‘விண்டோஸ்’ எனும் கணினி இயங்குதளத்தை அறிமுகப்படுத்தி எழுத்தறிவு இல்லாத பாமரனும் கணினியைக் கையாள முடிகிற அதிசயத்தை ஏற்படுத்தினார்.
ஒரு வீடு அளவில் பெரியதாக இருந்த கணினியை இன்று நமது மேஜையிலும் மடியிலும் சட்டைப் பாக்கெட்டிலும் கொண்டுவருவதில் பெரும்பங்கு வகித்த ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டவர்தான்.
அவ்வளவு ஏன்? இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என்று புகழப்படுபவர் ஜி.டி. நாயுடு. அவர் மூன்றாம் வகுப்போடு பள்ளிக்கூடத்தை டிஸ்மிஸ் செய்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர். 1920-ல் ஒரு பஸ்ஸைத் தமிழ்நாட்டில் சாலையில் ஓட்டி ‘பஸ் போக்குவரத்து’ என்ற புதுமையைத் தமிழகத்துக்குக் காட்டியவர்.1933-ல் 280 பஸ்களின் உரிமையாளர் ஆனார். 

1937-ல் இந்தியாவின் முதல் மோட்டாரை அவர் கண்டுபிடித்தார். உலகத்தரமான எலக்ட்ரிக் சேவிங் ரேஜரை கண்டுபிடித்தார். விவசாயத்திலும் சித்த மருத்துவத்திலும் பல புதுமைகள் செய்தார். கேமராக்கள், மண்ணெண்ணெயில் ஓடும் விசிறி, வாக்குப்பதிவு இயந்திரம் என அவரது கண்டுபிடிப்புகளின் பரப்பளவு பெரியது.
இந்தியாவில் தற்போது இத்தகைய புதுமையான தொழில் முன்முயற்சிகள் 4200 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இத்தகைய முயற்சிகளில் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. உயர்கல்வி படித்தவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். புதுமையான படைப்பாக்கத் திறன் கொண்ட எந்த ஒரு தனிமனிதருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அத்தகைய முன்முயற்சிகள் செழித்து வளர்வதில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.

http://tamil.thehindu.com/general/education.


நமதூரில் திறமையானவர்கள்  இல்லையா ? அதிகம் இருக்கின்றோம், ஆனால் நம்முடைய திறமைகளை உணராமல் கொடுத்த வேலைகளை மட்டும் செய்து கொண்டு இருக்கின்றோம்,நமதூர் மாணவர்களை சரியான முறையில் ஊக்குவிக்கும் போது இன்ஷாஅல்லாஹ் பல ஜி.டி. நாயுடுகளை நமதூரில்  உருக்க முடியும் . 

இப்படிக்கு 
மில்லத் கல்வி அறக்கட்டளை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக