கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் மாணவ-மாணவிகள்
அதிலும் குறிப்பாக பெற்றோர் மத்தியில் சற்று குறைந்துவருகிறது. ஒவ்வொரு
ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் அதிகரித்துவரும் காலியிடங்களும், கலை
அறிவியல் கல்லூரிகளில் சேர நிலவுகிற கடும் போட்டியும் இதற்கு நல்ல சான்று.
பொறியியல் படிப்புக்குச் சற்றும் சளைத்தவை அல்ல அடிப்படை அறிவியல்
படிப்புகள். அதாவது இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்றவை.
அறிவியல் துறையில் வேலைவாய்ப்புகளும், ஆராய்ச்சி வாய்ப்புகளும் நிறையவே
உள்ளன. ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
மத்தியில் குறைவாக இருக்கிறது. அவ்வளவுதான்.
சாதாரணமாக, பிளஸ்-2 முடித்துவிட்டு அறிவியல் படிப்பில் சேருவதாக இருந்தால்
ஏதேனும் ஒரு கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்.சி. படிக்க
வேண்டும். அதன் பின்னர் எம்.எஸ்.சி. படிக்கலாம். இதுஒரு வகை. இன்னொன்று,
பிளஸ்-2 முடித்துவிட்டு நேரடியாக ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி. (Integrated
M.Sc. course) படிப்பில் சேருவது.
இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி. படிப்பை மத்திய அரசின் அணுசக்தித்
துறையின் கீழ் இயங்கும் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள தேசிய அறிவியல்
கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute of Science
Education and Research-NISER), மும்பை பல்கலைக்கழகத்தில் அணுசக்தி
துறையின் கீழ் இயங்கிவரும் அடிப்படை அறிவியல் சீர்மிகு மையம் (Centre for
Excellence in Basic Science) ஆகிய கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
எம்.எஸ்.சி.-யில் உயிரியல், வேதியியல், கணிதம் படிக்கலாம்
மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த
படிப்புகளின் சிறப்பு என்னவெனில் மாணவர்களுக்கு மாதத்துக்கு ரூ.5 ஆயிரம்
வீதம் ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் கல்வி உதவித்தொகை கிடைக்கும். இதுதவிர,
புராஜெக்ட் செலவினங்களுக்காக ஆண்டுக்குத் தனியாக ரூ.20 ஆயிரம்
வழங்கப்படும். மத்திய அரசின் ‘இன்ஸ்பயர் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தின் கீழ்
இந்த உதவித்தொகையை வழங்குகிறார்கள். அதிநவீன ஆய்வகங்கள், கணினி வசதியுடன்
கல்வி, ஆராய்ச்சிக்கு உகந்த அருமையான சூழல் என இந்த உயர்கல்வி
நிறுவனங்களில் ஏராளமான வசதி வாய்ப்புகள் அமைந்திருக்கும்.
மேற்கண்ட ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்.சி. படிப்பில் சேருவதற்கு NEST
(National Entrance Screening Test) என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை
எழுத வேண்டும். 2016 -2017-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான “நெஸ்ட்”
நுழைவுத் தேர்வுக்கு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
பிளஸ்2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களை எடுத்து
குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி,
எஸ்.டி, வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் எனில் 55 சதவீத மதிப்பெண்கள்
போதும்.
2014, 2015-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்தவர்களும், 2016-ம் ஆண்டு பிளஸ்-2
முடிக்கும் மாணவ-மாணவிகளும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். புவனேஸ்வரம்
தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 132 இடங்களும்,
மும்பை பல்கலைக்கழகத்தில் செயல்படும் அடிப்படை அறிவியல் சீர்மிகு மையத்தில்
47 இடங்களும் உள்ளன. மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி எஸ்.சி,
எஸ்.டி, ஓ.பி.சி வகுப்பினருக்கு உரிய இடஒதுக்கீடு உண்டு.
நுழைவுத் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் அறிவியல், கணித பாடங்களிலிருந்து
கேள்விகள் கேட்கப்படும். பொதுவாக, சிபிஎஸ்இ பிளஸ்-1, பிளஸ்-2 பாடங்களில்
இருந்து வினாக்களை எதிர்பார்க்கலாம். நெஸ்ட் நுழைவுத்தேர்வு எழுத
விரும்பும் மாணவர்கள் www.nestexam.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி
ஆன்லைன் மூலம் வருகிற மார்ச் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நுழைவுத்
தேர்வு மே 28-ந் தேதி தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் 52
முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.
தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ஏப்ரல் 15 தேதி முதல் ஆன்லைனிலேயே பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் ஜூன் 17-ந் தேதி வெளியிடப்பட்டு, அதைத்
தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்படும். நுழைவுத் தேர்வுக்குரிய பாடத்திட்டம்,
முந்தைய ஆண்டுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்கள் உள்ளிட்ட
விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக