

மே 9 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: இணையதளத்திலும் பதிவிறக்கலாம்
முஸ்லிம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்ல் 103 இடங்களும்,பல் மருத்துவப் படிப்பில் 37 இட ஒதுக்கீட்டு இடங்களும் நிச்சயம் உண்டு!அதிகமான கட் ஆஃப் மதிப்பெண்களை பெரும் அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கு பொதுபிரிவிலும் இடமுண்டு என்பதை மறவாதீர்!
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் மே 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. நேரடியாகவும், இணையதளத்திலும் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.விமலா, தேர்வுக் குழு செயலர் ஜி.செல்வராஜன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:-
விண்ணப்ப விநியோகம் குறித்த அறிவிப்பு மே 8-ஆம் தேதி வெளியிடப்படும். விநியோகம் மே 9-ஆம் தேதி முதல் தொடங்கும்.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை ரூ.500 செலுத்தி நேரடியாகப் பெறலாம்.
இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்பவர்கள், விண்ணப்பத்துடன் ரூ. 500-க்கான வரைவோலையை இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அளிக்க மே 27 கடைசி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு மே 26-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு வந்து சேர கடைசித் தேதி மே 27 ஆகும்.
40 ஆயிரம் விண்ணப்பங்கள்: இரு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கூடுதல் விண்ணப்பங்கள் தேவைப்பட்டால் அச்சடித்து விநியோகிக்கப்படும் என்றனர்.
மொத்த இடங்கள்: 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,655 எம்.பி.பி.எஸ்.இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (15 சதவீதம்) 398 போக மீதம் 2,257 இடங்களும், 8 சுயநிதிக் கல்லூரிகளில் 595 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. இதுதவிர, கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 65 இடங்கள் என மொத்தம் 2,917 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
பிடிஎஸ்: பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக மீதம் 85 இடங்களுக்கும், 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 970 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் என மொத்தம் 1,055 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வு எப்போது?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜூன் 15-ஆம் தேதி தகுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து, ஜூலையில் முதல் கட்ட கலந்தாய்வும், ஆகஸ்டில் 2-ஆம் கட்ட கலந்தாய்வும் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி:தினமணி-கல்வி-20 April 2016 12:29 AM
http://www.dinamani.com/…/%E0%AE%AE%E0%A…/article3389072.ece
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக