Marque - Heading

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) "கற்பவராக இரு அல்லது கற்பிப்பவராக இரு அல்லது கற்பவருக்கும் , கற்பிப்பவருக்கும் உதவியாளனாக இரு"

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வி.ஏ.ஓ.தேர்வு மீண்டும் வருது.... தயாராகுங்க!!

சென்னை: கிராம நிர்வாக அதிகாரி(வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது அறிவித்துள்ளது. தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுத ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 14-ஆம் தேதி கடைசி நாளாகும்.
 
விஏஓ பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பிக்கும் நபருக்கு வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இந்தப் பணியிடங்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மொத்தம் 813 இடங்கள் காலியாக உள்ளன. தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. 
 
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந்தும் என்பதால் மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இது குறித்து குறிப்பிட வேண்டும்.
 
 எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு, திறனறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 300.
 
 எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே பணி உறுதியாகிவிடும். 
 
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குறிப்பு: இந்த நல்ல வாய்ப்பை பயன்டுத்தி நமதூரில் அதிகமான அரசு பணியாளர்களை உருவாக்குவோம். இன்ஷாஅல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக