
பிஹாரின் கஹரியா மாவட்டத்தில் உள்ள சன்ஹோலி குக்கிராமத்தில் வசித்து
வருபவர் சந்திரகாந்த். வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு 6
குழந்தைகள். ஏழ்மை காரணமாக குழந்தைகள் அனைவரையும் சந்திரகாந்த் அரசுப்
பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். அவர்களில் மூத்த மகனான வாத்ஸல்ய சிங்
சவுஹான், 12-ம் வகுப்பு இறுதித் தேர்வில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று
ஐஐடியில் சேருவதற்காக ராஜஸ்தானில் உள்ள கோட்டாவுக்கு வந்தார். அங்குள்ள
தனியார் பயிற்சி மையம் வாத்ஸல்ய சிங்கை அரவணைத்து நன்கு பயிற்சி அளித்தது.
இதனால் அகில இந்திய அளவில் நடந்த ஐஐடி-ஜேஇஇ நுழைவுத் தேர்வில் 382வது
ரேங்க் பிடித்து கரக்பூரில் உள்ள ஐஐடியில் பி.டெக் பட்டப்படிப்பில்
சேர்ந்தார். கடந்த டிசம்பர் மாதம் இங்கு நடந்த நேர்முக வளாகத் தேர்விலும்
வாத்ஸல்ய சிங் கலந்து கொண்டார். அப்போது அவரது திறமையை கண்டு வியந்த
அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் வாத்ஸல்ய சிங்குக்கு வேலைவாய்ப்பு
அளிக்க முன்வந் தது. மேலும் அதற்கான பணி நியமன ஆணையையும் வழங்கியது.
அந்த ஆணையை பிரித்துப் பார்த்த வாத்ஸல்ய சிங் அப்படியே இன்ப அதிர்ச்சியில்
உறைந்து போனார். ஆண்டுக்கு ரூ.1.02 கோடி சம்பளம் வழங்கப்படும் என
குறிப்பிடப்பட்டிருந்ததை படித்து நெகிழ்ந்து போனார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘‘ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை
கிடைத்துவிட்டது என தந்தையிடம் தெரிவித்தபோது முதலில் அவர் நம்ப
மறுத்தார். உண்மை என்று உறுதியானதும் அவரால் பேசவே முடியவில்லை. வரும் ஜூன்
மாதத்தில் பி.டெக் பட்டப்படிப்பு முடித்ததும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில்
இணையவுள்ளேன். இந்த வேலையால் எனது குடும்பத்தின் வறுமை அடியோடு
நீங்கும்’’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இது குறித்து வாத்ஸல்ய சிங்கின் தந்தை சந்திர காந்த் கூறும்போது,
‘‘மகனுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்த செய்தியை அறிந்ததும்
நாங்கள் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தோம்.
கடன் பெற்று மகனை படிக்க
வைத்ததற்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது’’ என்றார்.
வாத்ஸல்யாவின் தம்பி தற்போது டெல்லி ஐஐடியில் சேருவதற்கு முயற்சித்து
வருகிறார். அவரது தங்கை ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள மருத்துவக்
கல்லூரியில் சேருவதற்கு தனியார் பயிற்சி மையம் மூலம் நுழைவுத் தேர்வு
எழுதுவதற்கு தயாராகி வருகிறார்.
http://tamil.thehindu.com/india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக