Marque - Heading

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) "கற்பவராக இரு அல்லது கற்பிப்பவராக இரு அல்லது கற்பவருக்கும் , கற்பிப்பவருக்கும் உதவியாளனாக இரு"

செவ்வாய், 8 மார்ச், 2016

மத்திய பட்ஜெட்டில் கல்வி




 
 



எழுத்து பற்றிய அறிவின் முக்கியத்துவத்தை பழைய தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. பிச்சை எடுத்தாவது படித்துவிடுங்கள் என்று மிகவும் தீவிரமாக அவை பேசுகின்றன. ஆனால், இந்தியாவில் அப்படியான ஒரு தீவிரத்தோடு எல்லோரிடையும் இன்னும் எழுத்தறிவு பரவவில்லை. மெல்லத்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறது. 

பட்ஜெட்டில் கல்வி
 
ஆண்டு தோறும் மத்திய அரசானது போக்குவரத்து துறை முதல் விண்வெளி துறை வரை பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கும். அந்த வகையில் மத்திய அரசின் 2016 -17க்கான பட்ஜெட் வெளியாகியுள்ளது. இப்படி பட்ஜெட்போடும்போது தேசத்தின் ஆண்டு வருமானத்தில் குறைந்தபட்சம் ஆறு சதவீதத்தை கல்விக்காக செலவிடவேண்டும் என்று காலங்காலமாக கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனாலும் இதுவரையிலும் அது நடைபெறவில்லை. இந்த பட்ஜெட்டிலும் அது அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த முறை மத்திய அரசின் பட்ஜெட் வெளிப்படுத்துகிற உணர்ச்சி வழக்கமானதானதை விட வித்தியாசமானது. 

வளையும் கொள்கைகள் 

மத்திய திட்டக்கமிஷன் 2014-ல் ஒழிக்கப்பட்டதும் அதற்கு பதிலான அமைப்பாக நீதி ஆயோக் அமைக்கப்பட்டதும் இந்தியாவின் பொருளாதாரத் திட்டமிடலில் ஒரு கொண்டை ஊசி வளைவுப் பாதை. இந்தப் பாதையில் மத்திய அரசு பயணிப்பதால் தேசிய அளவில் திட்டங்களை உருவாக்கும் கட்டமைப்புகள் மாறி வருகின்றன. 

இத்தகைய மாற்றங்களின் காரணங்களில் 2011-ல் அமைக்கப்பட்ட பி.கே. சதுர்வேதி கமிட்டியும் ஒன்று. மத்திய அரசு நடத்தும் நல்வாழ்வுத் திட்டங்களை மிகவும் விரிவாக அது ஆய்வு செய்துள்ளது. அவற்றை மாநில அரசுகளின் பொறுப்புகளுக்கு மாற்றவேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்துள்ளது. 

மத்திய வரிகள் மூலமாக கிடைக்கும் பெருமளவிலான பணத்தை 2015 முதல் 2019 வரையான ஐந்தாண்டில் மாநில அரசுகளோடு மத்திய அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் என 2013-ல் டாக்டர் ஒய்.வி. ரெட்டி தலைமையில் உருவான 14 வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

கல்வி உரிமைக்கான நிதி
 
இத்தகைய பின்னணியில் கல்விக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகி உள்ளன. மத்திய அரசு தனது திட்டங்களை கைவிடுதல், மாநில அரசுகளிடம் ஒப்படைத்தல் எனும் பாணியை வேகப்படுத்தியுள்ளது. ஒரேயடியாக அதைச் செய்தால் மக்களிடம் கோபம் ஏற்பட்டுவிடுமோ என்ற தயக்கத்தால் மெதுவாக அதை செய்துவருகிறது.
கல்வி உரிமைச் சட்டத்தை அமலாக்குவதற்காக உருவானதுதான் அனைவருக்கும் கல்வி திட்டம். இந்த பட்ஜெட்டில் அந்த திட்டத்துக்கு 22,500 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. போன வருடத்தை விட 2.2 சதவீதம்தான் இது அதிகம். 

செஸ் தரும் கல்வி
 
வருமான வரி செலுத்துகிற தனிநபர்களும் நிறுவனங்களும் தங்களது வருமானத்தில் மூன்று சதவீதத்தை கல்விக்கான செஸ் வரியை செலுத்த வேண்டும் என்பது 2004 முதல் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது.
அந்த செஸ் வரி மூலம் வரும் வருமானம் மத்திய அரசு கல்விக்காக அறிவித்துள்ள தொகையில் 65 சதவீதம் இருக்கும். மத்திய அரசின் உதவித்தொகையாக 29 சதவீதமும் ஆறு சதவீதம் வெளி உதவிகள் மூலமாகவும் ஏற்பாடு செய்யப்படும். 

பாழடையும் கட்டமைப்பு
 
கல்வி உரிமைச் சட்டத்தின்படியான உள்கட்டமைப்புத் தேவைகளை இந்தியாவில் 8 சதவீதப் பள்ளிகளே கொண்டுள்ளன. 8.3 சதவீத பள்ளிகளில் 1 ஆசிரியர் தான் இருக்கிறார்கள். ஆறு முதல் 14 வரையிலான வயதில் உள்ள ஏறத்தாழ 4 கோடியே 30 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருக்கின்றனர். இந்த வயதிலான மொத்தக் குழந்தைகளில் இவர்கள் 100க்கு 18 பேர்.

2016-17 க்கான பட்ஜெட் அறிவிப்பு கல்விக்கான ஒதுக்கீட்டை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அடிப்படையான கட்டமைப்புத் தேவைகளுக்கும் ஆசிரியர் பயிற்சிக்கும் ஆசிரியர்களின் தேவைக்கும் 510 கோடி ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெண் கல்வி
 
பெண்குழந்தைகளுக்கான கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக நிறைய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வந்தது. அதில் ஒன்றாக, பேட்டி பச்சோவ் பேட்டி பதோவ் ( பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தையை பாதுகாப்போம்) என்னும் திட்டமும் இருக்கிறது. அதற்கு மட்டும் 100 கோடி ஒதுக்குவோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடுகள் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி பட்ஜெட் எதுவும் சொல்லவில்லை. மவுனமாக இருக்கிறது. 

கல்வி எனும் மூலதனம்
 
உயர்கல்விக்காக ஒரு நிதி நிறுவனத்தை மத்திய அரசு ஆரம்பிக்க உள்ளது. அதற்கு ஆரம்ப முதலீடாக 1000 கோடி ரூபாய்களை போடப் போகிறார்கள். அந்த நிதியை மேலும் மேலும் பெருக்க நன்கொடைகளும் சமூக பொறுப்புணர்வு செயல்பாட்டுக்காக பெருநிறுவனங்கள் ஒதுக்கும் நிதிகளும் பெற்றுக்கொள்ளப்படும். 

புதியதாக 62 நவோதயா பள்ளிகள் அமையும்.
 
தொழில் முனைவோருக்கான கல்வியும் பயிற்சியும் 2200 கல்லூரிகளுக்கும் 300 பள்ளிகளுக்கும் 500 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் 50 குறுகிய கால தொழிற்பயிற்சியகங்களுக்கும் ஆன்லைன் பாடங்கள் வழியாக பயிற்சியளிக்கப்படும் என்று பட்ஜெட் அறிவித்துள்ளது.
கல்விக்காக செலவழிப்பது ஒரு மூலதனம்தான் என்பது சாமானியர்களுக்குத் தெரியும். ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதியைப் போலவே முக்கியமானது கல்விக்கான ஒதுக்கீடும். அவ்வளவு முக்கியமானதாக அது மாறும்போதுதான் நாடு வலிமை படைத்த பாரதம் ஆகும்! 

இந்தியாவில் எழுத்தறிவு
 
2011 மக்கள் தொகை தகவல்கள் படி இந்தியாவில் தனது பெயரை எழுதத் தெரிந்தவர்கள் 100க்கு 74 பேர். அவர்கள் உயர்சாதிகளில் அதிகமாகவும் பழங்குடிகளில் மிக குறைவாகவும் உள்ளனர்.
இந்தியாவில் எழுத்தறிவில் முன்னேறியுள்ள முதன்மையான மாநிலம் கேரளாதான். அது தனது மாநிலத்தில் 100க்கு 94 பேருக்கு (93.91 சதவீதம்) எழுத்தறிவைத் தந்துவிட்டது. நாம் 100க்கு 80 பேருக்கு (80.33 சதவீதம்) நமது மாநிலத்தில் எழுத்தறிவைத் தந்துள்ளோம். எழுத்தறிவு உள்ள மாநிலங்களின் வரிசையில் இந்தியாவில் 14 வது மாநிலமாக இருக்கிறோம்.
மத்திய அரசின் பிரதேசமாக இருந்து வருகிற புதுச்சேரி பிரதேசம் தனது மக்களில் 100க்கு 87 பேரை (86.55 சதவீதம்) படிக்க வைத்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்தைவிடவும் முன்னதாக 7 வது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவின் தேசிய எழுத்தறிவு சராசரியான 74.04 சதவீதத்தை விட தமிழகமும் புதுச்சேரியும் முன்னேறியே உள்ளன. 

http://tamil.thehindu.com/general/education

வியாழன், 3 மார்ச், 2016

பி.எட்., படிக்க வேண்டுமா...?

சென்னை: தொலைநிலைக் கல்வியில் பி.எட். படிக்க விரும்புவோருக்காக மாணவர் சேர்க்கையை அறிக்கையை கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப்படிப்பில் சேர இளநிலை அல்லது முதுநிலையில் (தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி) போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது ஆசிரியராக பணியில் இருக்க வேண்டும்.

பி.எட்., படிக்க வேண்டுமா...? பாரதியார் பல்கலை அழைக்கிறது!! 
 
பொருளாதாரம் மற்றும் வணிகவியல் போன்ற துறையில் முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள், இளநிலையிலும் அதே துறை பிரிவில் பட்டம் பெற்றிருப்பது அவசியம். அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில், ஆசிரியர் கல்வி படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
 
இந்தப் படிப்பில் சேர விண்ணப்பம் செய்வதற்கு மார்ச் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

ஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்

ஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்: 7ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு. 

 

ஜிப்மரில் எம்பிபிஎஸ் சேர ஆசையா...? மார்ச் 7 முதல் ஆன்-லைனில் விண்ணப்பம்!!

ஜிப்மர் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரும், 7ம் தேதி முதல், ஆன்லைனில் வினியோகிக்கப்பட உள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், 200 எம்.பி.பி.எஸ்., இடங்கள்உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு
மூலம், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான, ஜிப்மர் நுழைவு தேர்வு வரும் ஜூன் மாதம், 5ம் தேதி, 75 நகரங்களில் காலை, 10:00 மணி முதல், 12:30 மணி வரை நடக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம், விண்ணப்ப வினியோகம் வரும், 7ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, நாகர்கோவில், திருச்சி, துாத்துக்குடி, நெய்வேலி, நாமக்கல் மற்றும் புதுச்சேரியில் நுழைவுத் தேர்வு நடக்கிறது. ஆன்லைன் மூலம், மே மாதம், 4ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். நுழைவு தேர்வு கட்டணம்: பொது பிரிவு, ஓ.பி.சி., - ஓ.சி.ஐ., பிரிவினர் விண்ணப்பபடிவ கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., விண்ணப்ப கட்டணம்,'நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு' வாயிலாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

கூடுதல் விவரங்களுக்கு jipmer.edu.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

புதன், 2 மார்ச், 2016

தேர்வுக்கு உற்சாகமாகப் புறப்படுங்கள்



பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வந்துவிட்டது. மாணவர்களெல்லாம் புத்தகமும் கையுமாகப் பரீட்சை எழுதும் நாளை எண்ணிப் பரபரப்பாக இருப்பீர்கள். “நாம படிக்காமல் விட்ட சேப்டர்ல இருந்து நிச்சயம் கேள்வி வரும்னு சொல்லிக்கிறாங்கடா… இப்ப தலையும் புரியல காலும் புரியல” என நண்பர்களுக்குள் பதற்றமாகப் பேசிக்கொண்டிருப்பீர்கள்.
“முக்கியமான பாடங்களை யெல்லாம் படிச்சுட்டோமா?”
“ரொம்பவும் கஷ்டம்னு விட்ட பகுதியையும் மனப்பாடம் செஞ்சாவது எழுதிடலாமா?” 

“எது கஷ்டமான பாடமோ அதை மட்டுமே திரும்பத் திரும்பப் படிச்சிக்கிட்டிருந்தா நல்லா படிச்ச பகுதிகள் மறந்துபோய்டுமோ?” …
இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் பயங்களும் மூளையைத் துளைக்கின்றனவா? எவ்வளவுதான் படித்து அத்தனை பாடங்களையும் எழுதிப் பார்த்துப் பிழைதிருத்தம் செய்து தயார்நிலையில் இருந்தாலும் ஒருவிதமான படபடப்பு இருக்கத்தான் செய்கிறது அல்லவா! இந்தப் பதற்றத்திலிருந்து எப்படி விடுபட? இதோ சில எளிய வழிகள்.
பயம் எதற்கு? 

முதலாவதாக இறுதிப் பரீட்சை எழுதப்போகிறோம் என்ற நடுக்கத்தை உதறித்தள்ளுங்கள். நீங்கள் பல முறை படித்து, உங்கள் வகுப்புத் தேர்வுகளில் எழுதிப் பார்த்து, மீண்டும் மீண்டும் படித்த பாடங்களைத்தான் இப்போது பொதுத் தேர்வு என்ற பெயரில் எழுதப்போகிறீர்கள். ஒரே வித்தியாசம், இப்போது பரீட்சை வேறு பள்ளியில் நடக்கவிருக்கிறது.
தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில் என்ன செய்யலாம்? கிட்டத்தட்ட எல்லாப் பாடப் பிரிவுகளையும் பல முறை படித்திருப்பீர்கள். இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் முதலாவதாகத் தொடங்கும் பரீட்சையைக் கடைசியில் படியுங்கள். 

குறிப்பு எடுக்கலாம்
அதிகாலை என்பது அமைதியான வேளை என்பதால் படிக்கும்போது உடலும் மனமும் ஒருமுகப்படும். இதனால் படிக்கும் அத்தனை விஷயங்களும் நன்றாக மனதில் பதியும். அதே வேளையில் போதுமான ஓய்வும் அத்தியாவசியம். உங்கள் புத்தகங்களை விரித்துவைத்துப் படிக்கப் போதுமான இடம், சரியான வெளிச்சம், சவுகரியமான நாற்காலி இருந்தால் சிறப்பு. முக்கியமாக கவனச் சிதறல் உண்டாக்கும் கணினி விளையாட்டு, வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவை பார்வையில் படாமல் இருந்தால் நல்லது. சிலர் மெல்லிய இசையைக் கேட்டுக்கொண்டே படித்தால் ஆழமான வாசிப்புக்கு உதவும் என்பார்கள். ஆனால் பொதுவாக அமைதியான சூழல்தான் நல்லது.
படிக்கும்போதே குறிப்பு எடுப்பது, ஃபுளோ சார்ட் வரைதல், விளக்க வரைபடங்கள் வரைதல் ஆகியவை சிறப்புச் சொற்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள உதவும். ஃபுளோ சார்ட் என்பது ஒரு தலைப்பின்கீழ் இடம்பெற வேண்டிய முக்கியத் தகவல்களைத் தனித் தனிப் பெட்டிகளில் துணைத் தலைப்புகளின் கீழ எழுதுவதாகும். அதே நேரத்தில் அவை ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டிருக்கும் வரிசையில் பிரித்தும் சேர்த்தும் எழுதுவதாகும். இறுதிக் கட்டத் தயாரிப்புக்கு இவை மிகவும் கைகொடுக்கும். சரசரவென அத்தனை குறிப்புகளையும் புரட்டிப் பார்த்தாலே போதும்; படித்த அத்தனையும் நினைவுக்கு வந்துவிடும். 

குழுவாகக் கற்கலாம்
கடந்த ஆண்டு கேள்வித் தாள்களை வைத்து மாதிரித் தேர்வுகள் எழுதலாம். இதன் மூலம் பரீட்சை எழுதிய உணர்வு முழுமையாகக் கிடைக்கும். குறிப்பிட்ட கால வரையறையில் எழுதிப்பார்க்கும்போது உங்களுடைய நேர நிர்வாகத்தைச் சரிபார்த்துக்கொள்ளலாம். இப்படி எத்தனை மாதிரித் தேர்வுகள் எழுதுகிறீர்களோ அந்த அளவுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இதில் பெற்றோருக்கும் முக்கியப் பங்குண்டு. குழந்தைகளுக்குப் பக்கபலமாக இருந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. தேர்வுக்குத் தயாராகும் குழந்தைகளுக்குப் போதுமான ஓய்வு தேவை என்பதை அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
குழு கற்றல் முறை மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டும். நண்பர்களோடு சேர்ந்து படிக்கும்போது பாடத்தில் உள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம், கடினமான கருத்து களை எளிதில் கலந்துரையாடிப் புரிந்துகொள்ளலாம். ஆனால் சிலருக்குக் குழுவாகப் படிக்கும்போது விளையாட்டுத்தனம் மேலோங்கும். அப்படியானால் நீங்கள் படித்தவற்றை உங்கள் பெற்றோரிடமோ அல்லது சகோதர, சகோதரிகளிடமோ விளக்குங்கள். இது தெளிவாகப் புரிந்துகொண்டு படிக்கக் கைகொடுக்கும். புரிந்த விஷயங்களை மனப்பாடம் செய்யத் தேவை இல்லை. ஆகையால் படித்தவை மனதில் நிற்குமா என்ற பயமும் பறந்துபோகும். 

உணவில் கவனம்
பொதுவாகத் தேர்வு என்றாலே பதைபதைப்பு அதிகரிக்கும். அதிலும் பொதுத் தேர்வு என்றதும் மன அழுத்தம் அதிகரிக்கும். விளைவு அதிகப்படியாகச் சாப்பிடுதல், உறக்கமின்மை போன்ற பிரச்சினைகள் வரக்கூடும். இந்தச் சூழலில் உங்கள் உணவுப் பட்டியலைத் திட்டமிடுவது முக்கியம். எண்ணெய்ப் பண்டங்களைத் தவிர்த்துவிட்டுப் பழங்கள், காய்கறிகள், வைட்டமின், புரதச் சத்து மிக்க உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது.
சோர்வாக உணரும் சமயங்களில் கொய்யா, வாழை, ஆரஞ்சு போன்ற பழங்களைச் சாப்பிட்டால் பசிக்கு ருசியான தீனியும், உடலுக்கு ஊட்டச்சத்தும் கிடைக்கும். சோம்பலையும் தவிர்க்க இது உதவும். படிக்கும் நேரத்தில் தூக்கத்தைத் தவிர்க்க, காபி, தேநீர் அருந்தும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. அதற்குப் பதிலாக மோர், இளநீர், சத்து மாவுக் கஞ்சி அருந்தலாம். மூளை சுறுசுறுப்பாக வேலைபார்க்க ஆக்ஸிஜன் அவசியம். அதற்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். 

தேர்வு நாளுக்குத் திட்டமிடல்
தேர்வு எழுதப் புறப்படும்போது நிதானமான மனோநிலையில் இருப்பது அவசியம். அதற்கு என்ன தேவை? கடைசி நேரத் தயாரிப்பை முதலில் தவிர்க்க வேண்டும். தேர்வுக்குத் தேவையான உபகரணங்களை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொண்டு எடுத்து வைப்பதற்குப் பதிலாக முன்கூட்டியே ஒரு சரிபார்ப்புப் பட்டியலை (Check list) தயார் செய்யுங்கள். இரண்டுக்கும் மேற்பட்ட பேனாக்கள், பென்சில், ரப்பர், ஸ்கேல், ஷார்ப்னர், கைக்கடிகாரம், தேர்வு நுழைவுச்சீட்டு, குடிநீர் பாட்டில் ஆகியவை இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். தேர்வு நடக்கவிருக்கும் மையத்துக்குச் செல்லும் வழியை, பயணிக்க வேண்டிய நேரத்தை தூரத்தை முன்கூட்டியே சரிபார்த்துவிடுங்கள். 

தேர்வு தினத்தன்று
தேர்வு அறையில் தேர்வு தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாளை விநியோகித்து 15 நிமிடங்கள் அளிப்பார்கள் இல்லையா! அப்போது கேள்விகள் அனைத்தையும் கவனமாகப் படியுங்கள்.
கேள்வித் தாளில் இடம் பெற்றிருக்கும் வரிசையில்தான் பதிலளிக்க வேண்டும் என்றில்லை. நன்றாக பதில் தெரிந்த கேள்விகளை முதலில் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இப்படி எழுதும்போது ஓரிரு முறை நீங்கள் சரிபார்க்க வேண்டியது கேள்வியின் எண்ணைச் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறோமா என்பதுதான்.
நேர நெருக்கடி ஏற்பட்டால் பதில்களைப் பத்திகளாக எழுதுவதற்குப் பதிலாக ஒரு வரிப் புள்ளிகளாக மளமளவென எழுதிவிடுங்கள். இதன் மூலம் கேள்விகளைத் தவறவிடாமல் இருக்கலாம். விளக்க வரைபடங்களுக்கு விவரத் துணுக்குகள் எழுத மறவாதீர்கள்.
எதுவாக இருப்பினும் ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

 தேர்வில் உச்சபட்ச மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற முனைப்பு இருப்பது சரிதான். இருந்தாலும் மதிப்பெண்களைவிட வாழ்க்கை பெரியது! 

http://tamil.thehindu.com/general/education/
 

செவ்வாய், 1 மார்ச், 2016

Annai Ayesa Arts & Science College for Women


இந்த நல்ல முயற்சியில் எங்களது பங்களிப்பும் உள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம் . (அல்ஹம்துலில்லாஹ்)

ஒரு பந்து... சில இறகுகள்... இப்போது நம்புகிறாயா உலகமே?

ன்றைக்கு வியந்துபார்க்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது அறிவியல் உலகம். நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் பூமியில் பிரசவிக்கின்றன. ஆனால் இன்றோடு ஒப்பிடுகையில், ஆரம்பகாலங்களில் அறிவியல் அறிஞர்களும், விஞ்ஞானிகளும் அளித்த அறிவியல் பங்களிப்புகள் மகத்தானது.

தங்களது கருத்தை வெளியிட்டால், கழுத்தை நெறிக்கும் மதநம்பிக்கைகள், மதவாதிகள் நிறைந்த சமூகம், புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் விதிக்கப்படும் மரணதண்டனைகள், கசையடிகள்  என எத்தனையோ பேர், தடைகளைத் தகர்த்து அறிவியல் உலகிற்கு தங்கள் வாழ்வை தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானி கலிலியோ கலிலி. மதநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதற்கு தண்டனை விதிக்கப்பட்டு, காலம் முழுக்க துயருற்ற மாபெரும் சகாப்தம் கலிலியோ. அவருக்கு முன்பு கூறப்பட்டிருந்த எத்தனையோ பொய்யான கோட்பாடுகளை, தகுந்த ஆதாரங்கள் மூலம் தவிடுபொடியாக்கியவர். அப்படி அவர் 15-ம் நூற்றாண்டில் பொய் எனக்கூறிய முக்கியமான கோட்பாடு, பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசை பற்றியது. இதனைப் பற்றிய தெளிவான விளக்கம் அளித்தாலும்,  அதனை துல்லியமாக நிரூபிக்க, போதுமான வசதிகள் அன்று இல்லை. மிக எளிமையான கோட்பாடு இது. அதைத்தான் தற்போது நவீன சோதனைகள் மூலம் உண்மை என நிரூபித்திருக்கின்றனர். அது என்ன?




அரிஸ்டாட்டில் VS கலிலியோ

அறிஞர் அரிஸ்டாட்டில் அளித்திருந்த விளக்கங்கள் எல்லாம் 15-ம் நூற்றாண்டில் புனிதநூல் போன்றவை. எந்தவித கேள்விகளும் இன்றி அரிஸ்டாட்டிலின் கோட்பாடுகளை அப்படியே நம்பிக்கொண்டிருந்தனர் மக்கள். அதில் பலவற்றை தகுந்த ஆதாரங்களுடன் பொய் என நிரூபித்தார் கலிலியோ. பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசை பற்றிய அரிஸ்டாட்டிலின் விளக்கம், “இரண்டு பொருட்களை சம தூரத்தில் இருந்து கீழே போட்டால், எடை அதிகமான பொருளானது முதலில் தரையை வந்தடையும்” என இருந்தது. இதை மறுத்தார் கலிலியோ. “இருவேறு எடை கொண்ட பொருட்களை சமதூரத்தில் இருந்து கீழே போட்டால், இரண்டு பொருட்களுமே ஒரே நேரத்தில்தான் தரையை வந்தடையும். அதன் மீது செயல்படும் முடுக்கம் (acceleration) ஒரே மாதிரிதான் இருக்கும்” என விளக்கம் அளித்தார் கலிலியோ. இதனை விளக்கத்தோடு நிறுத்தாமல் பைசா நகரின் சாய்ந்த கோபுரம் மீது ஏறி நின்று சோதித்து 1589-ம் ஆண்டு நிரூபித்தார். பைசா கோபுரம் மீது நின்றுகொண்டு, இரண்டு சமமற்ற எடைகளைக்கொண்ட இரும்பு குண்டுகளை கீழே போட்டார். இரண்டுமே ஒரே நேரத்தில் தரையை வந்தடைந்தது.  அரிஸ்டாட்டில் கூற்று தவறு என இத்தாலி மாணவர்களுக்கு புரியவைத்தார் கலிலியோ.

அதே சமயம் ஒரு இறகையும், இரும்பு குண்டையும் சம உயரத்தில் இருந்து கீழே போட்டால், இதே முடிவு கிடைக்குமா? கிடைக்காது. ஏனெனில், இரண்டின் அடர்த்தியும் வேறுபட்டது. அவை மேலே இருந்து கீழே விழுகையில் அவற்றை தடுக்கும் காற்று மற்றும் காற்றில் ஏற்படும் உராய்வு ஆகியவை பொருளின் வேகத்தை தடுத்து விடுகிறது. இதனால் இரும்பு எளிதாக காற்றை தள்ளி, வேகமாக தரைக்கு வந்துவிடும். இறகு மெதுவாக காற்றில் தவழ்ந்து வந்துவிழும். புவியீர்ப்பு விசையானது இரும்பு குண்டு மற்றும் இறகு ஆகிய இரண்டிலும் செயல்படுத்தும் விசையானது ஒன்றுதான். ஆனால் காற்று அதன் மேல் ஏற்படுத்தும் தடை இரண்டையும் வேறுவேறு விசையில் இயக்குகிறது. அந்த காற்று இல்லாத, வெற்றிடத்தில் இதே சோதனையை செய்தால் முடிவு நிச்சயம் கலிலியோ சொன்னது போல்தான் இருக்கும். இதனை கலிலியோ விளக்கினாலும், அப்போது இருந்த  தொழில்நுட்பம் கொண்டு கலிலியோவால் இதனை நிரூபிக்க முடியவில்லை. அதனை  தற்போது பிரம்மாண்டமாக செய்து காட்டியிருக்கிறார் பிரையன் கோக்ஸ்.

 

எப்படி சாத்தியமானது இது?

பிபிசி- 2 தொலைக்காட்சியின் புகழ்பெற்ற அறிவியல் தொடர் ‘Human Univers’.   இதனை வழங்குபவர் இயற்பியல் பேராசிரியரான பிரையன் கோக்ஸ். ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு இயற்பியல் தலைப்பை பிடித்து அதனை சோதனைகள் மூலம் விளக்குவது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. அப்படி கையில் எடுத்ததுதான் கலிலியோவின் புவியீர்ப்பு விசைக்கோட்பாடு. இதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் நாசாவின் ஆராய்ச்சிக்கூடம். 1969 ல் கட்டப்பட்ட இந்த ஆய்வுக்கூடம், அணு ஆயுத தொழில்நுட்பங்களை சோதனை செய்ய உருவாக்கப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றவுடன், தற்போது விண்கலன்களை சோதனை செய்யும் கூடமாகவும், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது.

முதலில் இந்த சோதனையை நடத்த, ஒரு பந்தும், சில இறகுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டும் ஒரே நேரத்தில் கீழே விழுமாறு உயரமான கம்பியில் கட்டப்பட்டது. ஆய்வுக்கூடத்தில் முதலில் காற்று இருக்கும்போதே சோதனை நடத்தப்பட்டு, இரண்டும் உயரத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றன. வழக்கம்போல பந்து முதலிலும், இறகுகள் மெதுவாகவும் தரையை வந்தடைகிறது. பின்னர், ஆய்வுக்கூடம் மூடப்பட்டு, உள்ளே இருக்கும் 8 லட்சம் கனஅடி காற்று 3 மணி நேரத்தில் வெளியேற்றப்படுகிறது. தற்போது ஆய்வுக்கூடம் முழுக்க, காற்று வெளியேற்றப்பட்டு முழு வெற்றிடமாக இருக்கிறது. பந்தும், இறகும் சோதனைக்கு தயாராக இருக்கிறது. இவற்றை படம் பிடிக்க, கேமராக்கள் ஆன் செய்யப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட, நொடியில் துல்லியமாக இரண்டு பொருட்களும் விடுவிக்கப்பட, இரண்டும் தரையை வந்தடைகிறது. எந்தவித தூர வேறுபாடும் இல்லாமல், ஒரே நேரத்தில் இரண்டும் தரையைத்தொடுகின்றன. கலிலியோ சொன்ன புவியீர்ப்பு விசை தொடர்பான கூற்றை அடிப்படையாக வைத்து உருவானதுதான் ஐசக் நியூட்டனின் புவியியல் கோட்பாடுகள். நியூட்டனும் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டவர்தான். இறுதியில் 4 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கலிலியோவின் விளக்கம் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
எல்லாப்பொருளின் மீதும், புவியீர்ப்பு விசை ஒரே அளவில்தான் இருக்கும். காற்று இல்லாத வெற்றிடத்தில், பொருளின் மீது, புவியீர்ப்பு விசை தவிர வேறு எதுவும் செயல்படாது என்பது இதன் முடிவு. ஐன்ஸ்டீன் வரையறுத்த, ஈர்ப்பு அலைகள் என்னும் ‘Gravitational Waves’ சமீபத்தில்தான் விஞ்ஞான உலகில் வியப்பை ஏற்படுத்தியது. பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றிய ஹாக்கிங் கோட்பாடு என நிறைய தீர்க்கப்படாத கோட்பாடுகள் நிறைய இருக்கின்றன. அவற்றின் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, இன்னும் அறிவியல் நமக்கு ஆச்சர்யங்களை பரிசளிக்கலாம்.

- ஞா.சுதாகர்
http://www.vikatan.com/news/world/59867-brian-cox-visits-worlds-biggest-vacuum-chamber.art